20/07/2020
தென்னைவளர்ப்பை அழிக்கத்துடிக்கும் உலகம்!!
முனைவர் செ அன்புச்செல்வன் MSc PhD MRSC
20/07/2020
பாமாயில் என்பது முழுமையுற்ற கொழுப்பமிலங்கள் நிறைந்தது என்பதால் உலகளவில் இதன் பயன்பாடு தேங்காயெண்ணையைவிட குறைந்திருக்கிறது. ஆனாலும், உலக எண்ணெய் நிறுவனங்கள் தென்னை வளர்ப்பை ஊக்குவிப்பதில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னம் கடலையெண்ணெயைப் பற்றி உண்மைக்குப்புறம்பான செய்திகள் உலகமெங்கும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாலும், தண்ணீர்ப்பற்றாக்குறை, போதிய விலையின்மை, ஆள்ப்பற்றாக்குறை போன்ற காரணங்களாலும்
இன்று நிலக்கடலை சாகுபடி குறைந்து கடலையெண்ணை என்பதோர் காணாப்பொருளாகிவிட்டதை நாமறிவோம். இதேபோல தென்னை வளர்ப்பையும் இப்போது குறிவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உலகளவில் 18.9 மில்லியன் ஹெக்டேர்களாக எண்ணெய்ப்பனை வளர்ப்பு பரந்து விரிந்து கிடந்தாலும் தென்னைவளர்ப்பு என்பது 12.3 மில்லியன் ஹெக்டேர்களாகத்தான் இருக்கின்றன.
பாமாயிலைப்போல அல்லாது தேங்காயெண்ணை உணவுப்பொருள்களில் மட்டுமல்ல மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
அண்மையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒரு ஆராய்ச்சி முடிவை
Current Biology என்னும் அறிவியல் இதழில்
(DOI: https://doi.org/10.1016/j.cub.2020.05.059) வெளியிட்டு பாமாயில் எண்ணெய் நிறுவனங்களைக் குளிரவைத்திருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு மில்லியன் டன் அளவிலான தேங்காயெண்ணை உற்பத்தியின் போதும் 20.3 அளவிலான பல்லுயிரிச்சூழல் சீர்கெட்டு அழிபடுகின்றது. விளங்கச்சொன்னால், தேங்காய் சாகுபடிக்காக காடுகள் அழிக்கப்பட்டு, அதிலிருக்கும் அரியவகை வண்டினங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள், விலங்குகள், பறவைகள் அழிக்கப்படுகின்றன. எண்ணிக்கையளவில் இது அதிகம் ஆகும். ஆனால், கட்டுரையின் தரவல்களில் கொடுக்கப்பட்டிருக்கும் பல்லுயிர்களின் எண்ணிக்கையும் கட்டுரையில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கையும் ஒன்றல்ல.
அதோடு, தென்னை வளர்ப்புப்பரப்புக்கும், எண்ணெய்ப்பனை மற்றும் ஆலிவ் வளர்ப்புப்பரப்புக்கும் உள்ள வேறுபாடுகளையும், குறிப்பாக ஆலிவ் அறுவடையின் போது ஒவ்வோராண்டும் கொல்லப்படும் அரியவகைப் பறவைகளின் எண்ணிக்கையுடனும் ஒப்பிட்டுப்பார்த்த இங்கிலாந்துப் பல்கலைகளில் சூழலியல் ஆராய்ச்சி செய்யும் பல்வேறு பேராசிரியர்கள் இந்தக்கட்டுரைக்கு எதிர்ப்புத்தெரிவித்து சமூக வலைத்தளங்களில் அமேசான் மற்றும் தென்கிழக்கு ஆசியநாடுகளில் முறையற்ற வகையில் செயல்படுகின்ற நிறுவனங்களைக் கண்டித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மாற்றம் பற்றிய கேள்விக்கு கட்டுரையாளர்கள் கணக்கில் ஏற்பட்ட பிழை என்றெல்லாம் சமாளித்து வருகிறார்கள். மறுகூட்டல் செய்து வெளியிட இதழைக் கேட்டிருக்கிறோம் என்றெல்லாம் சொல்வது பாமாயில் எண்ணெய் நிறுவங்களின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இங்கிலாந்து வார்விக் பல்கலையில் Primatology (விலங்கினப்பண்பியல்) துறையின் ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர் Adriano Lameira இதோ இப்படி கடுமையாக தனது சிட்டுரையில் (Twitter) எழுதியிருக்கிறார்.
//Dear logging companies, should you ever need to justify your destructive and extractive (illegal) activities in the Amazon + SE Asia, or protection against nature conservation NGO’s [nongovernmental organizations] or legal action, please refer to the following paper in Current Biology//
தென்னை வளர்த்துப் படித்தவன் என்பதாலும், அறிவியலில் யாரேனும் பிழைசெய்தால் அதே அறிவியல் சுட்டிக்காட்டத்தயங்காது என்பதைச் சொல்லவுமே இந்தப்பதிவு.