02/04/2025
உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில்.., எது தெரியுமா?
இராமநாதபுரத்தில் அமைந்துள்ள உத்திரகோசமங்கை சிவன் கோயில், சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒன்றாக மட்டுமின்றி, உலகின் முதல் சிவன் கோயிலாகவும் கருதப்படுகிறது. "உத்திரம்" என்றால் உபதேசம், "கோசம்" என்றால் ரகசியம், "மங்கை" என்றால் பார்வதி தேவி. சிவபெருமான், ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் ரகசியத்தை பார்வதி தேவிக்கு உபதேசித்த இடமாக இது நம்பப்படுகிறது.
இக்கோயிலின் பழமையை பறைசாற்றும் வகையில், "மண் தோன்றியதற்கு முன்பே மங்கை தோன்றியது" என்ற பழமொழி இப்பகுதியில் வழக்கில் உள்ளது. தொல்லியல் ஆய்வாளர்களின் கணிப்பின்படி, இங்குள்ள இலந்தை மரம் 3000 ஆண்டுகள் பழமையானது. நவக்கிரக வழிபாடு அறியப்படாத காலத்திலேயே இக்கோயில் தோன்றியதற்கு சான்றாக சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டுமே இங்கு காணப்படுகின்றன.
இக்கோயில் ராமாயண காலத்திற்கும் முந்தையது என்றும், ராவணன் மற்றும் மண்டோதரியின் திருமணம் இங்குதான் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. கோயில் கல்வெட்டுகளில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது இதற்கு சான்றாக உள்ளது.
இக்கோயிலின் சிறப்புகள்:
சிவபெருமானின் சொந்த ஊர்.
பிரணவ மந்திர உபதேசம் நடந்த இடம்.
3000 ஆண்டு பழமையான இலந்தை மரம்.
நவக்கிரக வழிபாட்டிற்கு முந்தைய கோயில்.
ராமாயண காலத்திற்கு முந்தைய பழமை.
ராவணன்-மண்டோதரி திருமணம் நடந்த இடம்.